Sunday, June 27, 2010

ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இந்திரா காந்தி விருது

தமிழகம், புதுச்சேரியில் லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றிய ஈஷா யோகா அறக்கட்டளைக்கு 2008 ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கு இந்திரா காந்தி பெயரில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விருதை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு, வெள்ளி‌த் தாமரை கோப்பை, பாராட்டுப் பத்திரம் ஆகியவை வழங்கப்படுகின்றன. 2008ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

2005ஆம் ஆண்டில் தமிழகத்தை சுனாமி தாக்கி ஏராளமானோர் பலியாயினர். மரங்கள் அதிகம் இருந்த கடலோரப் பகுதிகளில் சுனாமியின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. இதுபற்றி ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் செய்து பல பகுதிகளில் மரக்கன்றுகளை மக்களை கொண்டு நடச்செய்தனர். ஆறு கிராமங்களில் சில வாரங்களிலேயே 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழகம் முழுவதும் மரங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் பசுமைக்கரங்கள் என்ற மக்கள் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை தொடங்கியது. தமிழகம், புதுச்சேரி ஈஷா அறக்கட்டளையின் தொண்டர்கள் 3 லட்சம் பேர் சேர்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் 82 லட்சம் மரக்கன்றுகளை மக்கள் உதவியுடன் நட்டு பராமரித்து உள்ளனர். அடுத்த பத்தாண்டுகளில் தமிழகம் முழுவதும் மேலும் 10.6 கோடி மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள 6,284 இடங்களில் 2.52 லட்சம் தன்னார்வ தொண்டர்களை கொண்டு 8.52 லட்சம் மரக்கன்றுகளை ஈஷா அறக்கட்டளை நட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 20 மாவட்டங்களில் பசுமைக்கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈஷா அறக்கட்டளையின் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கியும் மரங்கள் வளர்க்க வேண்டியது அவசியத்தை விளக்கியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் சுற்றுச் சூழல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை, திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் ஈஷா மையம் கடந்தாண்டு துவங்கியுள்ளது.

ஜக்கி வாசுதேவ் தொடங்கிய ஈஷா அறக்கட்டளை கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது. உலகம் முழுவதும் இதற்கு 270 கிளைகள் உள்ளன. உலகம் முழுவதும் முழு நேரத் தொண்டர்கள், பகுதி நேரத் தொண்டர்கள் என 20 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.

மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் வேறு பல சேவைகளையும் ஈஷா அறக்கட்டளை செய்து வருகிறது. யோகா பயிற்சிகள், இந்திய பாரம்பரிய சிகிச்சைகள், நடமாடும் மருத்துவமனைகள் மூலம் குக்கிராம மக்களுக்கு சிகிச்சை வழங்குதல், கல்வி சேவை ஆகியவற்றையும் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment

Blog Archive