சென்னை, ஜூன் 16: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, சென்னையில் ரயில் மற்றும் விமான நிலையங்களில் சிறப்பு வரவேற்பு மையங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தனித் தனியே 2 வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 ஷிஃப்ட் முறையில் வருவாய்த் துறை அலுவலர்கள் 9 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் தமிழ அறிஞர்கள், மாநாட்டு சிறப்பு விருந்தினர்கள், சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் அழைப்பாளர்களை சிறப்பாக வரவேற்று, அவர்களுக்கு சென்னையில் உள்ள தங்கும் இடங்கள், உணவு, பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இவர்கள் வழங்குவர். இதுதவிர அவர்களுக்கு மருத்துவ உதவி, பயண முன்பதிவு செய்யவும் இவர்கள் வழிகாட்டுவர். சென்ட்ரலில் இந்த வரவேற்பு மையத்தை தொடர்பு கொள்ள தொ.பே. எண்: 044- 25350033.
இதே போல சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம்,
பன்னாட்டு முனையம் ஆகியவற்றில் தனித்தனியே இரு வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள சிறப்பு குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளது.
கோவை மாநாட்டுக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று, தேவையான தகவல்களை அளிக்கவும், அவர்களது பயணத்தைத் தொடரவும் இந்த குழு சிறப்புப் பணியில் ஜூன் 30-ம் தேதி வரை ஈடுபடும்.
மாநாட்டு சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட இலவச விளக்கக் கையேடுகளையும் விருந்தினர்ளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Thursday, June 17, 2010
செம்மொழி மாநாடு: சென்னையில் ரயில், விமான நிலையங்களில் சிறப்பு வரவேற்பு மையங்கள்
செம்மொழி மாநாடு சுயவிளம்பரத்துக்கு அல்ல: கருணாநிதி
சென்னை, ஜூன் 16: என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு அளித்து கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, குமணனை ஒத்த வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில் நடைபெறுகிறது. இது, தமிழுக்கு விழா. தமிழினம் விழாமல் இருக்க விழா.
தென்னகப் பலாக்கனியாம்-திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை; கலைநயமிக்க கவிதைச் சுளைகளைப் பருகிடவும் அவற்றின் இனிமை கண்டு உருகிடவும் ஆயிரமாயிரம் பேர் தமிழ்ச் சான்றோர் வருவது மட்டுமல்ல; அவர்களில் தமிழ்ப் புலமை மிக்கார்-மொழிப் புலமை மிக்கார் எடுத்துரைக்கும் வாதங்களைக் கேட்டிடவும் அனைவரும் செம்மொழி மாநாட்டுக்கு வர வேண்டும்.
புலவர் பெருமக்களும், அறிஞர் பெருமக்களும், கவிஞர் பெருமக்களும் அமர்ந்து அவதானிக்க இருக்கின்ற அழகுமிகு அறிவு நிறை அரங்குகளுக்கு அழைக்கின்றேன். நானே நேரில் வர முடியாமல் இந்த உயிரோவியத்தை உனக்கு அனுப்பி வைக்கின்றேன்.
விளம்பரப்படுத்த அல்ல: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவாம்! நீ அதை நம்ப மாட்டாய்! எனக்குத் தெரியும்.
ஆனால், தஞ்சையில் அன்றொரு நாள் உலகத் தமிழ் மாநாடு நடத்தி தன் பெயரை வைத்தே -தமிழ்த் தாய் வாழ்த்து தயாரித்து பாடிய தையலார் யார் என்று மறந்திருக்காது. தன்னையே தமிழ்த் தாய் என்றும் வாராது வந்த மாமணி என்றும் பாட்டு போட்டு பாடிக் கேட்டு பரவசப்பட்டார் ஜெயலலிதா.
இப்போது, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிறப்பொக்கும் என்று தொடங்கி சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் இணைத்து இறவாப் புகழ் கொண்ட நம் முன்னோர்க்கு நான் செலுத்திய காணிக்கை பாடல் எங்கே? தஞ்சை மாநாட்டில் அவர்கள் தயாரித்துக் கொண்ட தற்புகழ்ச்சி பாடல் எங்கே? இது அப்பாவி சீட கோடிகளுக்கு மறந்து விடக் கூடாது என்பதால் நினைவூட்டினேன் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
செம்மொழி மாநாடு நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை : முதல்வர் விளக்கம்
சென்னை : "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதில், தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர, அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தைப் புறக்கணித்து விட்டு, தி.மு.க., அரசு எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஏகடியம் செய்வதும், நாளுக்கொரு அறிக்கை விடுவதும் ஜெயலலிதாவின் அன்றாட நடைமுறையாகி விட்டது.அவர் ஆட்சியில், தஞ்சையில் நடத்திய எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கே எந்த வகையிலும் முன்மாதிரியாக அவர் குறிப்பிட்டது அமையவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் 1993ம் ஆண்டு பட்ஜெட்டில், "எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994ல் தமிழகத்தில் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அறிவிக்கப்பட்டபடி உலகத் தமிழ் மாநாடு 1994ல் நடத்தப்படவில்லை. மீண்டும் 1994 பட்ஜெட்டில், "எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் 1995ம் ஆண்டு ஜனவரியில் மிகப் பெரிய அளவில் நடக்க இருக்கிறது என்பதை அறிவதில் உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சியடைவர்' என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி தான், தஞ்சையில் 1995 ஜனவரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இரண்டு பட்ஜெட் உரையிலும் அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப் பட்டது தன்னிச்சையான அறிவிப்பே தவிர, உலகத் தமிழ் மாநாட்டை சர்வதேச சங்கம் தான் அறிவிக்க வேண்டுமென ஜெயலலிதா தற்போது குறிப்பிட்டிருப்பதைப் போல, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் அறிவிக்கவில்லை. உபதேசம் அனைத்தும் மற்றவர்களுக்குத் தானே தவிர அவர்களுக்கு இல்லை.உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுமென அறிவித்துவிட்டு, அதன் பின் உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமாவை தொடர்பு கொண்டு, அவர் அப்போது இந்தியாவில் இருப்பது அறிந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து, அன்றைய நிதியமைச்சர் நெடுஞ்செழியன், அவருக்கு மாநாடு பற்றி தெரிவித்தார்.
இப்போது கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு, உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவரான வா.செ.குழந்தைசாமி, பொருளாளர் முத்துக்குமாரசாமி, ஒருங்கிணைப்பாளர் சுப்புராயலு, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோரை கலந்து பேசியே மாநாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. கட்டுரை தயாரிக்க ஆய்வாளர்களுக்கு போதிய அவகாசம் கூடுதலாக தேவைப்படும் என்றும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விடுமுறைக் காலம் ஜூன் - ஜூலையில் அமைவதாலும், 2010 ஜனவரிக்குப் பதிலாக, ஜூன் - ஜூலையில் மாநாட்டை நடத்த, தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டது.
உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ள ஜப்பான் பேராசிரியர் நொபுரு கரஷிமா, தமிழகத்தில் மாநாட்டை 2011 ஜனவரியில் நடத்தலாமென கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், அவரது கருத்தை ஏற்றுச் செயல்படுவதில் உள்ள பிரச்னைகள் தமிழறிஞர்களுக்கு விளக்கப்பட்டது.அவர்களும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு, தமிழக அரசின் முயற்சிகளுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளனர்.
உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பொறுப்புகளில் உள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் இசைவளித்துள்ள நிலையிலும், உலக அளவிலும், இந்தியாவிலும் வாழக் கூடிய தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களுமாக 50க்கும் மேற்பட்டோர் செம்மொழி மாநாட்டை நடத்த முன் வந்ததற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்து கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் முக்கியக் கூறாக இருப்பது ஆய்வரங்கம். உலகளவில் ஆய்வாளர்களைக் கொண்டு நடத்த திட்டமிட்டுள்ள தரம்மிக்க கட்டுரைகளைக் கொண்டதாகத் திகழவிருக்கும் ஆய்வரங்க அமைப்புக் குழு, இலங்கைப் பேராசிரியர் சிவதம்பியை தலைவராகவும், அவ்வை நடராஜன், பொற்கோ ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடக்கவில்லையே எனும் பெரும் குறையை துடைக்கவும், அண்மைக்கால தொல்லியல், வரலாற்றியல், மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு, தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், ஆய்வாளர்களை ஒருங்கிணைக்கவும், அனைவரும் ஓரிடத்தில் கூடிச் சிந்திப்பதற்கும் வசதியாகத் தான் இம்மாநாட்டை தமிழக அரசு நடத்த முன்வந்திருக் கிறது. கடந்த மாநாடுகள் தமிழ் மாநாடுகளாக நடந்திருக்க, தமிழ் செம்மொழித் தமிழாக ஏற்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இம்மாநாட்டை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்துவதே பொருத் தம் என்று அறிஞர்களும், ஆய்வாளர் களும் கருதியதால் தான், கோவையில் மாநாடு நடத்த திட்டமிடப் பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதில் வேறு அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை . தொடக்கம் முதல் இம்முயற்சியில் இணைந்து பணியாற்றும் தமிழறிஞர்கள் அனைவரும் அறிவர். ஜெயலலிதா போன்றோர், முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.