Sunday, June 27, 2010

நாளை முதல் எம்.பி.பி.எஸ்.- பொ‌றி‌யிய‌ல் கலந்தாய்வு

சென்னை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு நாளை முத‌ல் தொடங்குகிறது. இதேபோ‌ல் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு‌ம் நாளை நட‌க்‌கிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசுகள், விளையாட்டில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் அனைத்துப் பிரிவினரில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 முதல் 200-க்கு 199.5 வரை உள்ள 79 மாணவ-மாணவியருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதே அரங்கில் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்று சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாலை 4 மணிக்கு எம்.பி.பி.எஸ். அனுமதிக் கடிதத்தை வழங்குகிறார்.

தொடர்ந்து 29ஆ‌ம் தே‌தி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. 30ஆ‌ம் தே‌தி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 2ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

மறுகூட்டல்-மறு மதிப்பீடு மூலம் மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்கள், அழைப்பு இல்லாவிட்டாலும் கலந்தாய்வு அட்டவணைப்படி உரிய மதிப்பெண் சான்றிதழுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அப்போதுள்ள காலியிடங்களைப் பொறுத்து அனுமதிக் கடிதம் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை முத‌ல் தொடங்க உள்ள பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான கலந்தாய்வில், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான சேர்க்கை நடைபெறுகிறது. தொடர்ந்து 29ஆ‌ம் தே‌தி முதல் ஜூலை 3 வரை தொழில்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 4ஆம் தேதியன்று மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.

ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கல‌ந்தா‌ய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blog Archive