Thursday, June 17, 2010

செம்மொழி மாநாடு சுயவிளம்பரத்துக்கு அல்ல: கருணாநிதி

17 Jun 2010

சென்னை, ஜூன் 16: என்னை விளம்பரப்படுத்திக் கொள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு அளித்து கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, குமணனை ஒத்த வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில் நடைபெறுகிறது. இது, தமிழுக்கு விழா. தமிழினம் விழாமல் இருக்க விழா.
தென்னகப் பலாக்கனியாம்-திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை; கலைநயமிக்க கவிதைச் சுளைகளைப் பருகிடவும் அவற்றின் இனிமை கண்டு உருகிடவும் ஆயிரமாயிரம் பேர் தமிழ்ச் சான்றோர் வருவது மட்டுமல்ல; அவர்களில் தமிழ்ப் புலமை மிக்கார்-மொழிப் புலமை மிக்கார் எடுத்துரைக்கும் வாதங்களைக் கேட்டிடவும் அனைவரும் செம்மொழி மாநாட்டுக்கு வர வேண்டும்.
புலவர் பெருமக்களும், அறிஞர் பெருமக்களும், கவிஞர் பெருமக்களும் அமர்ந்து அவதானிக்க இருக்கின்ற அழகுமிகு அறிவு நிறை அரங்குகளுக்கு அழைக்கின்றேன். நானே நேரில் வர முடியாமல் இந்த உயிரோவியத்தை உனக்கு அனுப்பி வைக்கின்றேன்.
விளம்பரப்படுத்த அல்ல: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என் பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவாம்! நீ அதை நம்ப மாட்டாய்! எனக்குத் தெரியும்.
ஆனால், தஞ்சையில் அன்றொரு நாள் உலகத் தமிழ் மாநாடு நடத்தி தன் பெயரை வைத்தே -தமிழ்த் தாய் வாழ்த்து தயாரித்து பாடிய தையலார் யார் என்று மறந்திருக்காது. தன்னையே தமிழ்த் தாய் என்றும் வாராது வந்த மாமணி என்றும் பாட்டு போட்டு பாடிக் கேட்டு பரவசப்பட்டார் ஜெயலலிதா.
இப்போது, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிறப்பொக்கும் என்று தொடங்கி சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் இணைத்து இறவாப் புகழ் கொண்ட நம் முன்னோர்க்கு நான் செலுத்திய காணிக்கை பாடல் எங்கே? தஞ்சை மாநாட்டில் அவர்கள் தயாரித்துக் கொண்ட தற்புகழ்ச்சி பாடல் எங்கே? இது அப்பாவி சீட கோடிகளுக்கு மறந்து விடக் கூடாது என்பதால் நினைவூட்டினேன் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Blog Archive