திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
அதிமுக சார்பில் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தியவர் மரியம் பிச்சை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ. பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மாலை 3 மணி வரை இடைவிடாமல் மனுத்தாக்கல் செய்யலாம்.
26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி போட்டியிடுகிறார். அதேசமயம், முக்கியக் கட்சியான திமுக இத்தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டசபை இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment